நாராயணசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்: புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும் மத்திய இணை மந்திரி கி‌‌ஷன் ரெட்டி உறுதி


நாராயணசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்: புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும் மத்திய இணை மந்திரி கி‌‌ஷன் ரெட்டி உறுதி
x
தினத்தந்தி 4 Jan 2021 6:15 AM IST (Updated: 4 Jan 2021 6:15 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய இணை மந்திரி கி‌‌ஷன் ரெட்டி உறுதியளித்தார்.

புதுச்சேரி, 

புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் கடந்த மாதம் 19-ந் தேதி தாமரை எழுச்சி யாத்திரை தொடங்கப்பட்டது. இதில் காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி என்ற கோ‌‌ஷத்துடன் யாத்திரை நடத்தப்பட்டது. இந்த யாத்திரையின் நிறைவு விழா நேற்று ரோடியர் மில் திடலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் மத்திய இணை மந்திரி கி‌‌ஷன் ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி சிறந்த ஆன்மிக பூமி. கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. புதுவையில் உள்ள காங்கிரஸ் அரசு மத்திய அரசின் திட்டங்கள் எதையும் இங்கு நிறைவேற்றவில்லை. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தான் புதுவையில் அமையும். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவை மக்களுக்கு கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது அந்த கட்சி தொண்டர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கும் ஒரே கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது. சில நேரங்களில் சுப்ரீம் கோர்ட்டையும் எதிர்க்கின்றனர். சட்ட விரோத போராட்டங்களுக்கு அந்த கட்சி துணை போகிறது. மத்திய அரசின் சிறப்பான திட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பதால் மக்கள் அந்த கட்சியை வெறுக்க தொடங்கி விட்டனர். அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.

பிரதமர் மோடி புதிய பாரதத்தை, மதிப்பு மிகு இந்தியாவை உருவாக்கி வருகிறார். அதே நேரத்தில் புதிய புதுவையை உருவாக்க அவர் காத்திருக்கிறார். புதுவையில் நல்ல பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அது பா.ஜ.க.வால் தான் முடியும். மத்திய அரசு வீடு கட்டும் திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் புதுவையில் சில ஆயிரம் மக்களுக்கு தான் அந்த திட்டம் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவைக்கு வர வேண்டும் என்றால் பா.ஜ.க. அரசு புதுவையில் அமைய வேண்டும். மத்திய அரசு கொரோனா காலத்தில் புதுவைக்கு 1500 மெட்ரிக் டன் அரிசியும், 450 மெட்ரிக் டன் பருப்பு வகைகளும் வழங்கியுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்ட அரசு பா.ஜ.க. என்பதை யாராலும் மறுக்க முடியாது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை புதுவைக்கு வழங்கினாலும், மாநில அரசின் ஊழலால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதுவை மாநிலத்தில் ரே‌‌ஷன் கடைகள் கிடையாது. மத்திய அரசு புதுவைக்கு உரிய பங்கை ஒதுக்கினாலும், மாநில அரசு அதனை பெற்று தருவது இல்லை. ரே‌‌ஷன் பொருட்கள் எங்கே? என்று புதுவை மக்கள் மாநில அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. இதே நிலை தொடர வேண்டுமா? மாற்றம் புதுவையில் அவசியமாகிறது. அதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி தான் அமைய வேண்டும். புதுவையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். இந்திய மக்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் சுயமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.

அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஒரே பொய்யை கூறி வருகிறார். யூனியன் பிரதேசமான புதுவையை அண்டை மாநிலத்துடன் இணைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று கூறி வருகிறார். நான் சார்ந்திருக்கும் ஆட்சியின் சார்பாகவும், பிரதமர் மோடியின் சார்பாகவும், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாகவும், மத்திய உள்துறை இணை மந்திரி என்ற முறையிலும் நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன்.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும். தொடர்ந்து பொய்களை கூறி வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு புதுவை மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதுவையில் பா.ஜ.க.வின் முதல் தேர்தல் கூட்டம் இது தான். காங்கிரஸ் இல்லாத புதுவையை அமைக்க வேண்டும். அதற்கு இந்த கூட்டம் தான் அடித்தளம். 1980-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சாதாரண தொண்டனாக இருந்த கி‌‌ஷன் ரெட்டி இன்று மத்திய மந்திரியாக உயர்ந்துள்ளார். சாதாரண தொண்டனையும் மத்திய மந்திரியாக ஆக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. தான். புதுவையில் குப்பை, குடிதண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்திற்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வரி விதித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது பா.ஜ.க வெற்றி பெற்று வருகிறது. இதே போல் புதுவையிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம். காங்கிரஸ் கட்சி முன்பு கூறியதை தான் நாம் தற்போது கூறி வருகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி. அது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி தான்.

தற்போது ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 4½ ஆண்டுகளில் புதுவையில் ரே‌‌ஷன் கடைகளை மூடிய பெருமை முதல்-அமைச்சர் நாராயணசாமியையே சேரும். காங்கிரஸ் ஆட்சி கொரோனாவை விட கொடியதாக உள்ளது. ஆனால் 2021-ல் மோடி தலைமையிலான ஆட்சியை புதுவையில் அமைப்போம். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட தாமரை எழுச்சி யாத்திரை பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. சென்ற இடங்களில் எல்லாம் மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

புதுவை மாநில பா.ஜ.க. மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா பேசியதாவது:-

புதுவையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதி என்பது இப்போதே முடிவாகி விட்டது. கடந்த 4½ ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஊழலை தவிர வேறு எதையும் செய்யவில்லை. 4½ ஆண்டுகளாக தூங்கி விட்டு தற்போது கவர்னர் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடவில்லை என்று முதல்-அமைச்சர், அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இது வேடிக்கையாக உள்ளது.

மக்களுக்கு எதையும் செய்யாத இந்த அரசை புதுவை மக்கள் வீட்டிற்கு அனுப்ப தயாராகி விட்டனர். புதுவை மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை. பா.ஜ.க.வால் தான் புதுவையில் வளர்ச்சியை கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில பொருளாளர் சங்கர் எம்.எல்.ஏ., செல்வகணபதி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன் குமார், மாநில துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், சாய் சரவணன், மாநில செயலாளர் அகிலன், பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் சிவக்குமார், சிறுபான்மை அணி தலைவர் விக்டர் விஜயராஜ், நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு, வர்த்தக பிரிவு தலைவர் பாலாஜி, ஊடக பிரிவு பொறுப்பாளர் குரு சங்கரன், அலுவலக செயலாளர் கவுரி சங்கரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டிக்கு பா.ஜ.க. சார்பில் வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் செல்ல முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு கருதி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை பொதுமக்கள் செல்லும் வழியாக செல்லும்படி அறிவுறுத்தினர்.


Next Story