லாரி-மொபட் மோதல்: கணவன் கண்ணெதிரே மனைவி பலி
வேடசந்தூர் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்ணெதிரே மனைவி பலியானார்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் மோகன். விவசாயி. அவருடைய மனைவி அஞ்சலை (வயது 35). நேற்று மாலை மோகன் தனது மனைவியுடன் வேடசந்தூருக்கு மொபட்டில் வந்தார். பின்னர் மீண்டும் ஊருக்கு அவர்கள் திரும்பி கொண்டிருந்தனர்.
வேடசந்தூரில், ஒட்டன்சத்திரம் சாலையில் அய்யனார் நகர் அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில் அவர்கள் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி விறகு ஏற்றிச்சென்ற லாரி, மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில், மொபட்டில் இருந்து கீழே விழுந்த அஞ்சலையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லேசான காயத்துடன் மோகன் உயிர் தப்பினார்.
தனது கண்ணெதிரே மனைவி இறந்ததை கண்ட மோகன், அஞ்சலையின் உடலை மடியில் வைத்து கதறி அழுதார். இந்த காட்சி, கல்நெஞ்சம் படைத்தோரையும் கரைய வைப்பதாக இருந்தது.
விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story