ஆன்லைன் மூலம் மலை கிளிகள் விற்பனை டாக்டர் உள்பட 5 பேர் கைது


ஆன்லைன் மூலம் மலை கிளிகள் விற்பனை டாக்டர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2021 7:49 AM IST (Updated: 4 Jan 2021 7:49 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மற்றும் சந்தைகளில் பாதுகாக்கப்பட்ட மலை கிளிகள் விற்றதாக அக்குபஞ்சர் டாக்டர் உள்பட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலமும், சந்தைகளிலும் பாதுகாக்கப்பட்ட மலை பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சந்தைகளில் ஆய்வு செய்தனர்.

அதன்படி சாந்தோம், மஸ்கான் சாவடி பகுதிகளில் சோதனை செய்தபோது, அங்கு பிறந்து சில நாட்களே ஆன மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.

அத்துடன் ராயபுரத்தில் உள்ள அக்கு பஞ்சர் டாக்டர் முகமது ரமலி (வயது 56) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது மலை கிளி குஞ்சுகள் வைத்திருப்பதும் தெரியவந்தது.

ஜோடி ரூ.4 ஆயிரம்

இந்திய அரசால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ம் ஆண்டு முதல் மலை கிளிகள் பாதுகாப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டது. மலைபிரதேசங்களில் வாழும் கிளிகள், டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை குஞ்சு பொரிக்கும்.

இந்த கிளி குஞ்சுகளை மொத்த விற்பனையாளர்கள் எடுத்து வந்து ஒரு ஜோடி ரூ.2 ஆயிரம் வரை சில்லரை விற்பனையாளர்களுக்கு விற்று வந்து உள்ளனர். இதை ஆன்லைன் மற்றும் சந்தைகளில் ஒரு ஜோடி ரூ.4 ஆயிரம் வரை விற்று உள்ளனர்.

5 பேர் கைது

இதையடுத்து சந்தோம், மஸ்கான் சாவடியில் விற்பனையில் ஈடுபட்டு இருந்த ராயபுரத்தை சேர்ந்த அக்கு பஞ்சர் டாக்டர் முகமது ரமலி, முத்துசெல்வம் (20), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெகன் (31), தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார்(27), பாரிமுனையை சேர்ந்த கார்த்திக்(35) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து சுமார் 53 மலை கிளி குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மலைகிளிகளை விற்பனை செய்வது, வீடுகளில் வளர்ப்பது குற்றமாகும். மலைகிளிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட கிளிகள் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. வனத்துறையினரே கண்டுபிடித்து கைப்பற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story