கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு


கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Jan 2021 10:42 AM IST (Updated: 4 Jan 2021 10:42 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டனர்.

செங்கம்,

செங்கம் அருகே இறையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமை தாங்கினார். கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.பன்னீர்செல்வம் வரவேற்று பேசுகையில், தி.மு.க. செய்யாததைச் செய்ததாக பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். மக்கள் அதை நம்ப வேண்டாம். அம்மாபாளையத்தில் உள்ள பால் பவுடர் தொழிற்சாலையை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வரைவு செய்யப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. கலசபாக்கம் தொகுதியில் உள்ள செண்பகத்தோப்பு, மிருகண்டா அணைகளை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வரைவு செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதற்கான அரசு ஆணையை காட்டி உண்மைநிலையை தொகுதி மக்களுக்கு உணர்த்தி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

பொங்கல் பரிசு

தமிழக முதல்-அமைச்சர் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டதன் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கவும், மருத்துவப் படிப்புக்கு தேவையான கல்லூரி கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும்.

ஏழை மாணவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வந்துள்ளார். பொங்கல் பரிசாக ரூ.2,500, புயலால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிதியை ஒதுக்கி விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான அனைத்துத் திட்டங்களையும் எடப்பாடியார் தலைமையிலான அரசு செம்மையாக செய்து வருகிறது, என்றார்.

வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன்எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஜெயலலிதா ஆட்சி தொடர ேவண்டும்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்து, தமிழக அரசு விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்கி வருகிறது.

அதன் மூலம் விவசாயிகளின் பாதுகாவலனாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திகழ்கிறார்கள். 2021 ஆண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும், எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வழக்கறிஞர் அணி மாநில துணைத் தலைவர் பாபுமுருகவேல், புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் எல்.புருஷோத்தமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர். தவமணி, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மாவட்ட கலைத்துறை செயலாளர் எல்.என்.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் நாராயணசாமி, மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர்கள் துரைசாமி, வள்ளிரகுபதி, இணைச் செயலாளர் பழனியம்மாள் பட்டுசாமி, ஒன்றிய பொருளாளர் ஆதிமூலம், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.பி.ராஜன், செல்வராஜ், இந்திரா ராமானுஜம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் முருகையன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் மேகநாதன், வனக்குழு தலைவர் பிரபாகரன், ஒன்றிய மாணவரணி செயலாளர் கே.ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் ஈ.பி.ஏழுமலை, சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் தவுலத்பாஷா உள்பட அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் புதுப்பாளையம் பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ராதா நன்றி கூறினார்.

Next Story