வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரெயில் பாதையில் சிக்னல் சோதனை தீவிரம்
வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பாதையில் தீவிரமாக சிக்னல் சோதனை நடந்து வருகிறது.
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர்
சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், சுரங்கப்பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய 2 ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து, ஜூன் மாதம் ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் 6 மாதங்களாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் 26-ந் தேதி டீசல் என்ஜின் இயக்கி தண்டவாளங்கள் பரிசோதிக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த 27-ந் தேதியில் இருந்து தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு கட்டுமானங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
தீவிர சிக்னல் சோதனை
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே அமைக்கப்பட்டு உள்ள 2 பாதைகளிலும் சிக்னல் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ரெயில் ஓட்டுனர்களுக்கு சிக்னல் மூலம் கிடைக்கும் தகவல்களை முறையாக பெற முடிகிறதா? ரெயில் ஓட்டுனர்களால் கட்டுப்பாட்டு அறையுடன் பேச முடிகிறதா? சுரங்க ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் உள்ள கதவுகள் முறையாக செயல்படுகிறதா? தானியங்கி கருவிகள் அந்தந்த ரெயில் நிலையங்கள் வந்த உடன் அறிவிப்பை சரியாக அறிவிக்கிறதா?.
சுரங்கப்பாதையில் அமைக் கப்பட்டுள்ள பாதுகாப்பு கருவிகள் செயல்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு சோதனைக் கான பணிகள் நடந்து வருகின்றன. இவை அனைத்துக்கும் சிக்னல்களுடன் தொடர்பு இருப்பதால் சிக்னல்கள் முறையாக செயல்பட்டால் தான் அனைத்து பணிகளும் ஒழுங்காக நடக்கும். எனவே இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
பிப்ரவரியில் போக்குவரத்து
இந்த பணிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டால், பாதுகாப்பு ஆணையருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படும். எப்படியும் இந்த பணிகள் நிறைவடைந்து இம்மாத இறுதியில் பாதுகாப்பு ஆணையர் இந்த பாதையில் ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த பாதையில் இயக்குவதற்காகவே தனியாக 10 மெட்ரோ ரெயில்கள் வாங்கப்பட்டு உள்ளன. அவையும் இந்த பாதையில் இயக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story