எடியூரப்பா தலைமையில் மும்பை கர்நாடக- மத்திய பகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: மந்திரிகள் மீது பரபரப்பு புகார்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 Jan 2021 6:00 AM IST (Updated: 5 Jan 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மும்பை கர்நாடக மற்றும் மத்திய கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மந்திரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு புகார்களை தெரிவித்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மத்திய பகுதி மற்றும் மும்பை கர்நாடக பகுதிகளை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த பகுதிகளை சேர்ந்த அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மூத்த மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் மந்திரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு புகார்களை கூறினர். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது கூறியதாவது:-

மந்திரிகள் எங்கள் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் வரும்போது, எங்களுக்கு அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தருவது இல்லை. மேலும் மந்திரிகள் நடத்தும் ஆய்வு கூட்டத்திற்கும் அழைப்பு வழங்குவது இல்லை. இவ்வாறு இருந்தால் எங்கள் தொகுதி பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது?. மந்திரிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால், நாங்கள் அங்கு தொகுதி பிரச்சினைகளை எடுத்துக் கூறி தீர்க்க முயற்சி செய்வோம். ஒவ்வொரு பிரச்சினையையும் முதல்-மந்திரியிடம் வந்து கூற முடியுமா?.

மேலும் மந்திரிகள் பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுடன் அரசியல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றுகிறார்கள். எங்களின் கோரிக்கைகளை புறக்கணித்து விடுகிறார்கள். இவ்வாறு செய்தால் நாங்கள் எப்படி மீண்டும் வெற்றி பெற முடியும்?. அதனால் மந்திரிகள் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும்போது, அதுபற்றி உள்ளூர் எம்.எல்.ஏ.க்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி மந்திரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட வேண்டும். எங்களின் தொகுதி பிரச்சினைகளை கேட்க வேண்டும். எல்லா மந்திரிகளும் இவ்வாறு நடந்து கொள்வது இல்லை. ஒரு சில மந்திரிகள் தான் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்று எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.

இதை அமைதியாக கேட்டுக் கொண்ட முதல்-மந்திரி எடியூரப்பா, இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும், மந்திரிகள் சுற்றுப்பயணம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

மத்திய கர்நாடகம் மற்றும் மும்பை கர்நாடக பகுதி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. காலையில் மத்திய கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. உணவு இடைவேளைக்கு பிறகு மும்பை கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. மும்பை கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அண்மை காலமாக எடியூரப்பாவுக்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.


Next Story