மனைவியை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் 2 மகள்களுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி


மனைவியை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் 2 மகள்களுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 5 Jan 2021 4:24 AM GMT (Updated: 5 Jan 2021 4:24 AM GMT)

மனைவியை மீட்டு தரக்கோரி 2 மகள்களுடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் குமரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பறக்கை காடேற்றியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 36), தொழிலாளி. இவர் நேற்று தன்னுடைய 2 மகள்களை அழைத்துக்கொண்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றபடி தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை திடீரென தன்னுடைய உடலில் ஊற்றினார். அதோடு தன்னுடைய மகள்கள் மீதும் மண்எண்ணெயை அவசர, அவசரமாக ஊற்றினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், உடனே அவரை தடுத்தனர்.

அதே சமயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து சுதாகரன் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கியதோடு அவர் மீதும், சிறுமிகள் மீதும் தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து சுதாகரனை கண்டித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது என்னுடைய மனைவியை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரக்கோரி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் கூறினார். மேலும் அவர் கலெக்டர் அலுவலகத்தில் அளிப்பதற்காக வைத்திருந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மனைவி மாயம்

எனக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி அன்று மகள்களை அழைத்துக்கொண்டு திட்டுவிளை அருகில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் என் மனைவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது மகள்களை அங்கு விட்டுவிட்டு என் மனைவி மாயமானது தெரியவந்தது. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

எனவே இதுபற்றி பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தேன். இந்த நிலையில் என் மனைவி கடந்த மாதம் 14-ந் தேதி ஒரு வாலிபருடன் சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினார்.

காரில் கடத்தல்

இதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் சென்ற பூதப்பாண்டி போலீசார் என் மனைவியை அழைத்து வந்து அவருடைய தாயார் வீட்டில் ஒப்படைத்தனர். ஆனால் தற்போது அங்கிருந்த என் மனைவியை சம்பந்தப்பட்ட வாலிபர் காரில் வந்து கடத்தி சென்றுவிட்டார். எனவே என் மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுதாகரன் நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். 2 சிறுமிகளும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் 2 மகள்களுடன் சுதாகரன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story