தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சவப்பெட்டியுடன் நூதன ஆர்ப்பாட்டம்; சீர்மரபினர் நலச்சங்கத்தினர் 22 பேர் கைது
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சவப்பெட்டியுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீர்மரபினர் நலச்சங்கத்தினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்கள் பலரும் மனு அளிக்க வந்தனர். அவர்கள் தங்களின் மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா ஆகியோரிடம் அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்துக்கு சீர்மரபினர் நலச்சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் சிலர் சவப்பெட்டியுடன் வந்தனர். தமிழகத்தில் பழங்குடி சீர்மரபினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சீர்மரபினர் சமுதாயம் என்ற சாதிச்சான்றிதழை பழங்குடி சீர்மரபினர் (டி.என்.டி.) என்று சான்றிதழ் வழங்கக்கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய 22 பேரை போலீசார் கைது செய்து, தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நோய் பரவும் அபாயம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், "வீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையோர பகுதியை பலரும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால், தண்ணீர் மாசுபட்டு மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
பெரியகுளம் தென்கரையை சேர்ந்த ராமராஜ் என்பவர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தனது நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இதுதொடர்பாக மனு அளித்தார்.
மேலக்கூடலூரை சேர்ந்த கண்ணன் அளித்த மனுவில், "நான் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டினேன். எனக்கு ரூ.50 ஆயிரம் மட்டும் வரவு ஆனது. மீதி தொகை இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
வனத்துறையினர் நோட்டீஸ்
பெரியகுளம் அருகே அகமலையை சேர்ந்த சொர்க்கமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில், "5 தலைமுறையாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் பகுதியே ஜமீன் காலத்திலேயே வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம், வனத்துறைக்கு சொந்தமான இடம் என அளவீடு செய்து சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியில் சில இடங்களில் மட்டும் வனத்துறையினர் நில அளவீடு செய்தனர். 2 மாதங்களுக்கு முன்பு அனுபவத்தில் உள்ள நிலத்தில் இருந்து வெளியேற 2 விவசாயிகளுக்கு வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இதுகுறித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தோம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். ஆனால், மீண்டும் 6 பேருக்கு வனத்துறையினர்
நோட்டீஸ் வழங்கினர். அத்துடன் மேலும் 3 பேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நோட்டீசை பெற்றுக்கொள்ளுமாறு வனத்துறையினர் தெரிவித்தனர். எங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story