2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு; நீலகிரி கலெக்டர் தொடங்கி வைத்தார்


கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்த காட்சி.
x
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்த காட்சி.
தினத்தந்தி 5 Jan 2021 5:57 AM GMT (Updated: 5 Jan 2021 5:57 AM GMT)

நீலகிரியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 601 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் முதல்-அமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு மற்றும் ரூ.2,500 வழங்க உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முதல் வினியோகம் தொடங்கியது. முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது.

ஊட்டி கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

தினமும் 200 கார்டுதாரர்கள்
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் 402 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 794 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 601 அரிசி பெறும் ரேஷன் கார்டுகள் ஆகும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வருகிற 12-ந் தேதி வரை தினமும் 200 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் 13-ந் தேதி அன்று பெற்று கொள்ளலாம் என்றார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத், சாந்தி ராமு எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர்
கூடலூர் தாலுகாவில் 39 ஆயிரத்து 991 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள 4 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை முன்னாள் அமைச்சர் அ.மில்லர் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான், தகவல் தொடர்பாளர் செந்தில், ஜலேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதிவாசி மக்கள் ஆர்வம்
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் குக்கிராமங்களில் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 2,500 பணத்தை பெற ஆதிவாசி
மக்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. இதனால் காலை 8 மணி முதல் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியுடன் வந்து வரிசையில் நின்றனர்.

கூடலூர் மண் வயல், செருமுள்ளி, போஸ்பாரா, மச்சிகொல்லி, மசினகுடி, பாடந்தொரை உள்பட பல இடங்களில் ஆதிவாசி மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் மற்றும் பரிசு தொகுப்பை பெற்றுச் சென்றனர்.

கோத்தகிரி
கோத்தகிரி பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை கூட்டுறவு பண்டகசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வடிவேல் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜதுரை 
ஆகியோர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் கொட்டும் மழையிலும் வரிசையாக நின்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிச் சென்றனர்.

இதேபோல ஓர சோலை பகுதியில் கோத்தகிரி அ.தி.மு.க. செயலாளர் நஞ்சு என்கிற சுப்பிரமணி தலைமையிலும், தப்பகம்பை பகுதியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட 65 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

Next Story