திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 63 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் தொடங்கிவைத்தனர். 63 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020 -21 ஆம் ஆண்டு பருவத்தின் கரும்பு அரவை தொடக்கவிழா கேத்தாண்டப்பட்டியில் உள்ள சர்க்கரை ஆலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஏ.ஆர்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.செல்வம் முன்னிலை வகித்தார். மேலாண்மை இயக்குனர் என். ரகமத்துல்லாகான் வரவேற்றார்.
கரும்பு அரவையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் கரும்பு கட்டுகளை அரவை எந்திரத்தில் போட்டு தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-
சர்க்கரை ஆலை ஊழியர்கள் மற்றும் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கரும்பு அரவைக்கு உத்தரவிட்டுள்ளது. 63 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு அபிவிருத்தியை ஊக்குவிக்க விதைகரும்புகள் வழங்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் ஆர்.ரமேஷ், டாக்டர் என்.திருப்பதி, ஆர்.நாகேந்திரன், அரசுவழக்கறிஞர் ரா.ரமேஷ், கரும்பு அலுவலர்கள் நேரு, ஜி வாசுதேவன் கூட்டுறவு சக்கரை ஆலை நிர்வாகஇயக்குனர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர் முடிவில் கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெற்றிவேந்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story