ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி


ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 5 Jan 2021 3:49 PM IST (Updated: 5 Jan 2021 3:49 PM IST)
t-max-icont-min-icon

உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளியில் உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு டிசம்பர் கடைசி வாரம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை அன்று பருத்தி விற்பனை நடப்பது வழக்கம். பருத்தி ஏலத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மிட்டூர், கந்திலி, சிங்காரப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தியை மூட்டைகளில் கட்டி கொண்டு வந்து விற்பனைக்கு வைப்பார்கள்.

அதை கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருக்கும் வியாபாரிகள் ரகசிய முறையில் பருத்தி தரம் பார்த்து விலை நிர்ணயம் செய்வார்கள். அதில் அதிக விலை கேட்கும் வியாபாரிகளுக்கு பருத்தியை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை விவசாயிகளுக்கு மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்குவார்கள்.

அதன்படி நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அதில் 1500 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்து வைத்தனர். டி.சி.எச். பருத்தி ரகம் ஒரு குவிண்டால் ரூ.7,600-க்கும், ஆர்.சி.எச். பருத்தி ரகம் ரூ.6,300-க்கும் ஏலம் போனது. நேற்று ஒரேநாளில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. பணத்தை உடனடியாக நேற்றே கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜன் வழங்கினார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story