குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Jan 2021 7:14 PM IST (Updated: 5 Jan 2021 7:14 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 4,36,847 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.116.49 கோடி மதிப்பில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தமிழக அரசின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்க விழா பெரியாம்பட்டி, கெரகோடஅள்ளி, காரிமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் 163 விவசாயிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 4,36,847 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.116.49 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் 1,071 ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

தமிழக முதல்-அமைச்சர் அனுமதி அளித்ததன் பேரில் தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ.314 கோடியே 14 லட்சம் மதிப்பில் 44,637 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இது இலக்கை விட ரூ.54 கோடி கூடுதல் ஆகும்.

2020-2021-ம் நிதியாண்டில் தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 325 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 37,595 விவசாயிகளுக்கு ரூ.293 கோடியே 80 லட்சம் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த விழாவில் உதவி கலெக்டர் தணிகாசலம், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காவேரி, கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், தமிழ்நாடு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், தாசில்தார் கலைச்செல்வி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் சந்திரன், அருவி, காந்தி, பழனிசாமி, மண்டல மேலாளர் பார்த்திபன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story