புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் ஒன்றியம் பசவண்ணக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மா (வயது 55). இவருடைய மகள் சம்பங்கி (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இவர்கள் 2 பேர் மட்டும் வீட்டில் உள்ளனர். தாய், மகள் 2 பேரும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் 1¾ சென்ட் நிலம் வாங்கி ஓட்டு வீடு கட்டியுள்ளனர்.
இவர்களது வீட்டிற்கு செல்ல 5 அடி பாதை உள்ளது. இந்த பாதையில் நீங்கள் செல்லக்கூடாது என அதேபகுதியில் வசித்த ஒருவர் இவர்களை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் கந்திகுப்பம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் புகாரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் முனியம்மா, அவருடைய மகள் சம்பங்கி ஆகிய 2 பேரும் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலகம் முன்பு சம்பங்கி மட்டும் தான் கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து வந்து தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.
பின்னர் அவர்களை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story