ஐகோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தக்கோரி ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் - கலெக்டரிடம் மனு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடமும் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் போலியான ஆவணங்களை கொடுத்து கணக்கு தொடங்கி சுமார் ரூ.83 லட்சம் வரை முறைகேடு செய்து இருப்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த அக்டோபர் மாதம் தெரிய வந்தது. இது தொடர்பாக ஆத்மா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 13 வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 23 உதவி மேலாளர்கள் என 36 பேரை வெவ்வெறு வட்டாரங்களுக்கு இடமாற்றம் செய்து கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே பணியிடமாற்றம் செய்யப்பட்ட 36 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடை உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் இந்த தடை உத்தரவை இதுவரை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி நேற்று ஆத்மா திட்டத்தில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் ஒருநாள் அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது :-
சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை ஆணை உத்தரவுப்படி வேளாண்மை இயக்குனரால் மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பழைய இடத்தில் பணி அமர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் இதுவரை ஐகோர்ட்டு உத்தரவு பின்பற்றப்படவில்லை. எனவே மறு உத்தரவு பிறப்பித்து மீண்டும் பழைய தலைமையிடத்தில் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மறு உத்தரவு வழங்காததால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க அடையாள பணி புறக்கணிப்பு செய்து உள்ளோம். ஐகோர்ட்டால் வழங்கப்படும் இறுதி தீர்ப்பு எதுவாகிலும் அதை ஏற்று நாங்கள் அந்த வட்டாரத்தில் பணியினை தொடர்வோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story