சேலத்தில், வணிகர்களுடன் தயாநிதிமாறன் எம்.பி. கலந்துரையாடல் - தொழிலை பாதுகாக்க வணிக வர்த்தக மையம் அமைக்கப்படும் என உறுதி


சேலத்தில், வணிகர்களுடன் தயாநிதிமாறன் எம்.பி. கலந்துரையாடல் - தொழிலை பாதுகாக்க வணிக வர்த்தக மையம் அமைக்கப்படும் என உறுதி
x
தினத்தந்தி 5 Jan 2021 8:04 PM IST (Updated: 5 Jan 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வணிகர்களுடன் தயாநிதி மாறன் எம்.பி. கலந்துரையாடினார். அப்போது அவர் தொழிலை பாதுகாக்க வணிக வர்த்தக மையம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

சேலம்,

சேலம் அழகாபுரம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் வணிகர்கள், வியாபாரிகள், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், தயாநிதிமாறன் எம்.பி. கலந்து கொண்டு வணிகர்கள், வியாபாரிகள், வெள்ளி கொலுசு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கால் கடந்த 9 மாதங்களாக அதிகாரிகளின் நடவடிக்கையால் வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் வணிகர்கள் புகார் தெரிவித்தனர்.

வெள்ளி கொலுசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பேசும்போது, ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நஷ்டம், கடன் சுமையால் வெள்ளி கொலுசு தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே இத்தொழிலை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து தயாநிதிமாறன் எம்.பி. பேசியதாவது:-

வணிகம் மற்றும் தொழில் நன்றாக இருந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் தொழில் வளம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் வியாபாரிகள் எவ்வளவு கஷ்டத்திற்கு ஆளானார்கள் என்று இங்கு தெரிவித்தீர்கள்.

வணிகர்கள், வியாபாரிகளின் கோரிக்கைகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்த்து அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேலத்தில் வணிக வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சில கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் சேர்க்காவிட்டாலும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அவை நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து சங்கர்நகர் தமிழ் சங்கத்தில் நடந்த மகளிர் சுய உதவி குழுவினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘தி.மு.க., பெண்களுக்கு சொத்தில் பங்கு என்ற சட்டத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவேற்றி பெண்களின் உரிமைக்காக போராடிய இயக்கம். பொங்கல் பரிசு ரூ.2,500 கொடுத்ததை எண்ணி ஏமாற வேண்டாம். அவை மக்களிடம் இருந்து பல்வேறு வகையில் பெறப்பட்ட வரி பணம். எனவே அதனை பெற்று கொண்டு ஏமாந்து வாக்களித்து விட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள் சக்கரை சரவணன், சாந்தமூர்த்தி, வக்கீல் அண்ணாமலை, வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story