மதுரை விமான நிலையத்தில் கொரோனா காலத்தில் சிக்கிய ரூ.3¼ கோடி கடத்தல் தங்கம்


மதுரை விமான நிலையத்தில் கொரோனா காலத்தில் சிக்கிய ரூ.3¼ கோடி கடத்தல் தங்கம்
x
தினத்தந்தி 5 Jan 2021 9:21 PM IST (Updated: 5 Jan 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் கொரோனா காலத்தில் ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் மதுரை விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. 144 தடை உத்தரவில் பல்வேறு தளர்வுகளுக்கு பின்னர் மே மாதம் 12-ந்தேதி மதுரையில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தற்போது விமான சேவையானது சீராக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் தவித்த இந்தியர்கள், சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களை மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா அழைத்து வந்தது. அந்த வகையில் துபாய், சிங்கப்பூர், அபுதாபி, லெபனான், மாலத்தீவு, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள இந்தியர்கள் விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனையுடன், சுங்கத்துறையினரின் சோதனையும் நடந்தது. இந்த சோதனைகளுக்கு பிறகே அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடந்த 7 மாதங்களில் கொரோனா கால கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மதுரை விமான நிலைய சுங்கப்புலனாய்வுத்துறை துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, மதுரை விமான நிலைய சுங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. 2020 ஜூன் முதல் 2020 டிசம்பர் வரையிலான 7 மாதங்களில் விமானம் மூலம் மதுரைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்த வழக்குகளின் அடிப்படையில், ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 6607.290 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் ஈடுபட்டவர்களில் 12 பெண்களும் அடங்குவர். மேலும், டிசம்பர் மாதம் வரை, மதுரை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 8 பேரை சுங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்திலும் அயராது பணியில் ஈடுபட்டு வரும் சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகளின் முயற்சிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்கள் வழியாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story