திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.60,800 பறிமுதல்


திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.60,800 பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2021 9:28 PM IST (Updated: 5 Jan 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 800-ஐ பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சில ஊழியர்கள் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.

துணை தாசில்தார், இரண்டு சர்வேயர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் இரண்டு சர்வேயர்களிடம் ரூ. 5, 400 மற்றும் ஆவண எழுத்தர்கள் சிவகுமார், ராம்குமார், முத்துப்பாண்டி ஆகியோரிடம் பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ. 60 ஆயிரத்து 800 கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி கூறும்போது 'ஆவண எழுத்தர்கள் பட்டா மாறுதல் செய்வதற்காக இந்த பணத்தை கொண்டு வந்துள்ளனர். சர்வேயர் மற்றும் ஆவண எழுத்தர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 60 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது' என்றார். இரவு 9.30 மணிக்கு மேலும் சோதனை தொடர்ந்தது.

Next Story