அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 8-ந் தேதி நடக்கிறது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jan 2021 6:31 AM IST (Updated: 6 Jan 2021 6:31 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8-ந் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

மும்பை, 

மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தயார் நிலை குறித்து 4 மாவட்டங்களில் ஒத்திகை நடத்தப்பட்டது.

அடுத்து வருகிற 8-ந் தேதி நாடு முழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது. அப்போது மராட்டியத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திகை நடத்தப்படும். இந்த ஒத்திகையின் போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

அதேநேரத்தில் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடுவதற்காக போதுமான அளவு தடுப்பு மருந்து கிடைக்குமா என்பது குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏனென்றால் மராட்டியத்தில் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் மட்டும் 7 லட்சத்து 90 ஆயிரம் பேர் உள்ளனர். மராட்டியத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.

ஏழை மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட மத்திய அரசு முன்வர வேண்டும். ரூ.500 கொடுத்து அவர்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாது.

வருகிற 7-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை மந்திரியுடன் நடைபெறும் வீடியோகான்பரன்சின்போது தேவையான தகவல்களை கேட்டு பெறுவோம் என்று அவர் கூறினார்.

Next Story