புதுச்சேரியில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


புதுச்சேரியில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யக்கூடும்:  வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 6 Jan 2021 6:34 AM IST (Updated: 6 Jan 2021 6:34 AM IST)
t-max-icont-min-icon

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்திருந்தாலும், பருவமழை அடுத்த வாரம் வரை தொடரும் என்று ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் உள்பட சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 6-ந்தேதி (இன்று) இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

7-ந் தேதி (நாளை) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 8-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 9-ந்தேதி (சனிக்கிழமை) தென் தமிழகத்தின் சில இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story