அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது


அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 6 Jan 2021 3:29 PM IST (Updated: 6 Jan 2021 3:29 PM IST)
t-max-icont-min-icon

அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள பள்ளேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவி சத்யா (வயது 33). இவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம், தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பி பல பெண்கள் தங்களிடம் இருந்த பணத்தையும், நகைகளையும் கொடுத்துள்ளனர். இவ்வாறு பல பெண்களிடம் நகை, பணத்தை பெற்ற சத்யா சில நாட்கள் வட்டியை சரியாக கொடுத்து விட்டு பின்னர் சரிவர வட்டி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் சாக்குப்போக்கு சொல்லி, பணம் கொடுத்தவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை அடுத்து சத்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார்.


Next Story