அரசின் சாதனைகளை அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


அரசின் சாதனைகளை அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 6 Jan 2021 5:45 PM IST (Updated: 6 Jan 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் சாதனைகளை அ.தி.மு.க. தொண்டர்கள் வீடு,வீடாக சென்று பொது மக்களிடம் எடுத்துக் கூறி, எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இலக்கியம்பட்டி அன்னை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.

ஒன்றிய நிர்வாகிகள் முருகன், வேல்மல்லன், கோபால், சம்பத், மோகன், கந்தசாமி, மணி, தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளையும் நிறைவேற்றி உள்ளது. இதனை மறைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து மக்களை திசைதிருப்பி வருகின்றனர். எனவே தமிழக அரசின் சாதனைகளை அ.தி.மு.க. தொண்டர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளில் அ.தி.மு.க. பெற்ற வெற்றியைக் காட்டிலும், வருகிற சட்டசபை பொதுத்தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். இதற்காக நிர்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணியாற்ற வேண்டும்.

தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் சரித்திர சாதனை நிகழப்போகிறது. இதனை பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்பும் வகையில் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். அவர்களின் பொய் பிரசாரத்தை நாம் முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் சம்பத்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், அ.தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை ரவி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, உலக மாதேஷ், வேளாண் விற்பனை குழு துணைத்தலைவர் சிவப்பிரகாசம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெரியண்ணன், வேலுமணி, மதிவாணன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கட்சியின் தர்மபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் நீலாபுரம் செல்வம் நன்றி கூறினார்.

Next Story