பரமக்குடி அருகே, சுங்கச்சாவடியை அனைத்து கட்சியினர் முற்றுகை - 125 பேர் கைது
பரமக்குடி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி சுங்கச்சாவடியை அகற்றக் கோரியும், விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், அனைத்து கட்சிகளின் சார்பில் சத்திரக்குடியில் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மயில்வாகனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, தாலுகா செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைத்து கட்சியினரும் சத்திரக்குடி பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அங்கிருந்து ஊர்வலமாக சுங்கச்சாவடியை நோக்கி சென்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் தடையை மீறி மீண்டும் சுங்கச் சாவடியை நோக்கி புறப்பட்டு சென்று திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கதிரவன், ஒன்றிய பொருளாளர் குணசேகரன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாநில செயலாளர் ஆனந்தகுமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன் காந்தி, பரமக்குடி வக்கீல் பசுமலை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவா, ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் நகர் தலைவர் ஷேக் அப்துல்லா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story