புதிய கட்டுப்பாடுகளின்படி ஒரு மாடுபிடி வீரர் ஒரு ஜல்லிக்கட்டில் மட்டுமே பங்கேற்க முடியுமா? கொரோனா பரிசோதனை கட்டாயம்
புதிய கட்டுப்பாடுகளின்படி ஒரு மாடுபிடி வீரர் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் பங்கேற்க முடியும் என தெரியவருகிறது. அதே நேரத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும்.
வருகிற 14-ந் தேதி பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், 15-ந் தேதி பாலமேட்டிலும், 16-ந் தேதி அலங்காநல்லூரிலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடந்து வரும் இந்த போட்டிகளுக்கு இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டின்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாணிக்கம் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சுஜீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஜல்லிக்கட்டு விழா குழுவினர், “ஒவ்வொரு ஆண்டும் குறைவான நேரம் ஒதுக்கப்படுவதால் போதுமான அளவு காளைகளை களத்தில் இறக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே இந்த முறை கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். அதே போல் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் நேரம் ஒதுக்கி களத்தில் இறங்க அனுமதிக்க வேண்டும்” என்றனர்.
கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் பேசியதாவது:-
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளை கடைபிடித்தும், சுப்ரீம் கோர்ட்டு வழிமுறைகளின்படியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
இந்த பரிசோதனை ஜல்லிக்கட்டு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும். எனவே அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று இல்லாதவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா இருந்தாலோ அல்லது பரிசோதனை செய்யாவிட்டாலோ போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது.
இந்த பரிசோதனை ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 8 மணி முதல் பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும். கூடுதல் நேரம் ஒதுக்குவது குறித்து போட்டி நடைபெறும் போது முடிவு செய்யப்படும். ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படும். அவர்கள் 50 பேர் வீதம், 6 சுற்றுகளாக களம் இறக்கப்படுவார்கள்.
இதற்கான டோக்கன் வழங்கும் பணியினை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் விழா குழுவினர் ஆகியோர் மேற்கொள்வார்கள். அரசின் உத்தரவுப்படி 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தான் பார்வையாளர்கள் பகுதிக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கிருமி நாசினி தெளித்து அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் சுமார் ஆயிரம் மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் அவனியாபுரத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பவர்கள் மறு நாள் பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு ஒரு போட்டியில் 300 பேர் மட்டுமே களம் இறக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே வழக்கம் போல் ஆயிரம் வீரர்களை களம் இறக்க முடியாது. இதற்கு தீர்வாக ஒரு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட உள்ளது.
உதாரணமாக அவனியாபுரத்தில் பங்கேற்பவர்கள் அடுத்து நடைபெறும் பாலமேடு, அலங்காநல்லூரில் பங்கேற்க முடியாது என்று தெரிகிறது. அதாவது ஒரு வீரருக்கு ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். அதே போல் ஒரு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கும் மற்றொரு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இதுதொடர்பான புதிய விதிகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story