பொங்கலூர் அருகே ஜவுளிக்கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.2 லட்சம் கொள்ளை


பொங்கலூர் அருகே ஜவுளிக்கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 6 Jan 2021 8:12 PM IST (Updated: 6 Jan 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே ஜவுளிக்கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.2 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள பொல்லிக்காளி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). இவர் திருப்பூர் -தாராபுரம் சாலையில் உள்ள பொல்லிக்காளிபாளையத்தில் பாலாஜி சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை 10 மணிக்கு வழக்கம்போல் வந்து கடையை திறந்தார்.

அப்போது கடையின் உள் பகுதியில் இருந்த சிமெண்ட் சீட் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பணம் வைத்திருந்த மேஜை டிராயரை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.2 லட்சம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட அவினாசிபாளையம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளின் உருவம் ஏதும் பதிவாக உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story