பொங்கல் விடுமுறை முடிந்ததும் பள்ளிகளை திறக்க வேண்டும் - கருத்துகேட்பு கூட்டத்தில் பெற்றோர் வலியுறுத்தல்
பொங்கல் விடுமுறை முடிந்ததும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கருத்துகேட்பு கூட்டத்தில் பெற்றோர் வலியுறுத்தினர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த கல்வி ஆண்டு தொடங்கியதும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்பு நடக்கிறது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு கருத்து கேட்கப்பட்டது. எனினும், இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறப்பதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பெற்றோரிடம் கருத்து கேட்பதற்கு கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளில், பெற்றோரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. இதற்காக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையுடன் பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
அப்போது கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு மாணவ-மாணவிகள் ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் படிப்பது முக்கியம். எனவே, பொங்கல் விடுமுறை முடிந்ததும் பள்ளிகளை திறக்க வேண்டும். அதோடு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story