பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு - கறிக்கோழிகளை கோவைக்கு கொண்டு வரவும் தடை


பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு - கறிக்கோழிகளை கோவைக்கு கொண்டு வரவும் தடை
x
தினத்தந்தி 6 Jan 2021 9:32 PM IST (Updated: 6 Jan 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கறிக்கோழிகளை கோவைக்கு கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

போத்தனூர்,

கேரளா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில், கேரள மாநிலம் கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்து பண்ணையில் நோய் பரவி 1,500 வாத்துகள் இறந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக-கேரளா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், தமிழக-கேரளா எல்லையில் கோவை மாவட்டம் அமைந்து உள்ளதால், கேரளாவில் இருந்து கோவைக்குள் வரும் அனைத்து வழித்தடங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி, வாளையார், மீனாட்சிபுரம், நடுப்புணி, கோபாலபுரம், வேலந்தாவளம், ஆனைக்கட்டி, முள்ளி உள்பட 12 இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் சிறப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் கோவைக்கு கோழி இறைச்சிகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடுன் கண்காணிப்பு பணிகள் தொடர்பாக வாளையார் சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் கீதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:-

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவலை தொடர்ந்து தமிழக-கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளனர். சோதனைச்சாவடிகளுக்கு வரும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மேலும் கேரளாவில் இருந்து கறிக்கோழிகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதையும் மீறி கறிக்கோழிகளை ஏற்றி வந்தால் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. இங்கு உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளுக்கும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அனைத்து மருந்துகளையும் தெளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த தடுப்பு நடவடிக்கையை அவர்கள் கையாளுகிறார்களா? என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்தால் அவற்றை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி விடப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story