கார் மீது மோதி விட்டு பாலத்தை உடைத்து அந்தரத்தில் தொங்கியபடி நின்ற தனியார் பஸ் - பயணிகள் அலறல்; அக்காள்- தம்பி படுகாயம்


கார் மீது மோதி விட்டு பாலத்தை உடைத்து அந்தரத்தில் தொங்கியபடி நின்ற தனியார் பஸ் - பயணிகள் அலறல்; அக்காள்- தம்பி படுகாயம்
x
தினத்தந்தி 6 Jan 2021 9:36 PM IST (Updated: 6 Jan 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

கார் மீது மோதி விட்டு பாலத்தை உடைத்து அந்தரத்தில் தொங்கியபடி தனியார் பஸ் நின்றது. இதில் அக்காள்- தம்பி படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை உக்கடத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று காலை பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி கோவை -ஈச்சனாரி பாலத்தில் சென்றது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. எதிர்பாராதவிதமாக தனியார் பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதின.

இதில் பஸ் மற்றும் காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது. கண்ணாடி கள் நொறுங்கின. காருடன் மோதிய நிலையில் தனியார் பஸ் கட்டுப் பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புசுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். இதன் காரணமாக அந்த பாலத்தில் போக்குவரத்து தடை பட்டது.

தனியார் பஸ் மோதியதில் காரின் உள்ளே இருந்த ஒரு ஆணும், பெண்ணும் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது போல் பஸ்சில் இருந்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வேறு பஸ்சில் சென்றனர்.

போலீசார் நடத்திய விசாணையில், காரில் வந்தவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த அஜய் (வயது24), அவருடைய அக்காள் காஞ்சனாதேவி (34) என்பது தெரியவந்தது.

பாலத்தை உடைத்து அந்தரத்தில் தொங்கியது போல் நின்ற தனியார் பஸ் மற்றும் காரை போலீசார் கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story