நண்பரின் குடோனில் இருந்த ரூ.17 லட்சம் பொருட்களை மோசடி செய்த என்ஜினீயர், மனைவிக்கு வலைவீச்சு


நண்பரின் குடோனில் இருந்த ரூ.17 லட்சம் பொருட்களை மோசடி செய்த என்ஜினீயர், மனைவிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jan 2021 9:49 PM IST (Updated: 6 Jan 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

நண்பரின் குடோனில் இருந்த ரூ.17 லட்சம் பொருட்களை மோசடி செய்த என்ஜினீயர், அவருடைய மனைவி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சரவணம்பட்டி,

கோவை கோவில்பாளையத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அபிநயா. இவருடைய கணவர் ஜனார்தனன். இவர்கள் 2 பேரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்திருந்தனர். ஆனால் அந்த நிதி நிறுவன உரிமையாளர் பணத்தை திருப்பி தர முடிய வில்லை என்று தெரிகிறது.

அதற்கு ஈடாக நிதி நிறுவன உரிமையாளர், தனது அலுவலக பொருட்கள் மற்றும் அவர் நடத்தி வந்த அழகு நிலையத்தில் உள்ள அனைத்து உபகரணங்களையும் ஜனார்த்தனனிடம் கொடுத்துள்ளார்.

ஜனார்தனன், கோவை ராமநாதபுரத்தில் வசிக்கும் தனது நண்பரான என்ஜினீயர் அருண்குமார், அவருடைய மனைவி தீபதர்ஷினி ஆகியோரின் பொறுப்பில் நீலாம்பூர் பகுதியில் குடோனை வாடகைக்கு எடுத்து அங்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்களை வைத்துள்ளார்.

அந்த குடோனுக்கான ரூ.15 ஆயிரம் வாடகையை ஜனார்த்தனன் கடந்த 2 மாதங்களாக கொடுத்து வந்துள்ளார். குடோன் சாவியும் ஜனார்த்தன னிடம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஜனார்த்தனன் கடந்த வாரம் குடோனுக்கு சென்றார். அங்கு பூட்டு உடைக்கப்பட்டு வேறு பூட்டு போடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனார்த்தனன், குடோன் பொறுப்பை கவனித்த அருண்குமார், தீபதர்ஷினி ஆகியோரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்க வில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து ஜனார்த்தனன், அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தார். இதில், அருண்குமாரும், தீபதர்ஷினியும் வேனில் வந்து குடோனில் இருந்த பொருட்களை எடுத்து சென்றதாக கூறியுள்ளனர். இது குறித்து ஜனார்த்தனின் மனைவி அபிநயா கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் அருண்குமார், அவரது மனைவி தீபதர்ஷினிமீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story