ஊத்துக்கோட்டையில் மழை காரணமாக, ஆரணி ஆற்று தற்காலிக சாலையில் சேறும் சகதியால் வாகன ஓட்டிகள் அவதி
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று தரைப்பாலம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக சாலையில் மழை காரணமாக சேரும் சகதி உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தரைப்பாலம் சேதம்
நிவர் புயல் காரணமாக ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை முழுவதுமாக நிரம்பியது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 25-ந் தேதி உபரிநீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு பஸ், லாரி மற்றும் கனரக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தின் கிழக்கு திசையில் சுமார் 700 மீட்டர் தொலைவுக்கு தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை வழியாக தற்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் மாற்றுவழியில் திருவள்ளூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
சகதியான தற்காலிக சாலை
இந்தநிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மதியம் வரை தொடர்ந்த மழை காரணமாக தரைப் பாலம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக சாலை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
அதையொட்டி, நேற்று காலை வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற மினி லாரி மற்றும் கார் சகதியில் மாட்டிக் கொண்டன. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையறிந்து, ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் கார் மற்றும் மினி லாரியை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர், வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story