மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து
பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைப்படும் போது, பூண்டியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதி புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 616 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த எதிர்பாராத திடீர் மழையால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகியது. இதனால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படும் நீர்வரத்து அதிகரித்தது.
புழல், செம்பரம்பாக்கம்
இதனை கருத்தில் கொண்டு, நேற்றுமுன்தினம் இரவு பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதையொட்டி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. அதாவது தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 487 கன அடியிலிருந்து 994 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும்.
3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மதியம் ஏரியின் நீர்மட்டம் 34.96 அடியாக பதிவாகியது. 3 ஆயிரத்து 135 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியும், கிருஷ்ணா நீர் வினாடிக்கு 680 கன அடியாகவும் வந்து கொண்டிருந்தது.
Related Tags :
Next Story