மராட்டிய காங்கிரசுக்கு புதிய தலைவர் யார்? - கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Jan 2021 6:49 AM IST (Updated: 7 Jan 2021 6:49 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய காங்கிரசுக்கு புதிய தலைவர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தியது.

மும்பை, 

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பாலசாகேப் தோரட் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக மாநில கட்சி மூத்த தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் எச்.கே. பாட்டீல் தீவிர ஆலோசனை நடத்தினார்.

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவராக பாலசாகேப் தோரட் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மாநில கூட்டணி அரசில் வருவாய்த்துறை மந்திரியாகவும் பதவி வகிக்கிறார்.

காங்கிரசில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற பார்முலாவின் அடிப்படையில், எந்த பதவியை விட்டுக்கொடுக்க போகிறீர்கள் என்று பாலசாகேப் தோரட்டிடம் கட்சி மேலிடம் கேட்டதாகவும், அதற்கு மாநில கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் மாநில காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்து உள்ளது.

இதையடுத்து மராட்டிய மாநில காங்கிரசுக்கான மேலிட பொறுப்பாளரான கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் மந்திரி எச்.கே. பாட்டீல் கடந்த 2 நாட்களாக மும்பையில் சுற்றுப்பயணம் செய்தார்.

நேற்று முன்தினம் இரவு சயாத்திரி விருந்தினர் மாளிகையில் அவர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இதில் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் உள்பட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் கட்சி மேலிடம் யாரை நியமிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றும் போட்டியில் ராஜீவ் சதவ், மந்திரிகள் அமித் தேஷ்முக், யசோமதி தாக்குர், விஜய் வடேடிவார், விஷ்வஜீத் கதம் ஆகியோர் உள்ளனர். இதில் ராஜீவ் சதவ், ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் என்பதால், அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story