செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 50 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை; புதுவை போக்குவரத்து துறை நோட்டீஸ்


செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 50 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை; புதுவை போக்குவரத்து துறை நோட்டீஸ்
x
தினத்தந்தி 7 Jan 2021 7:06 AM IST (Updated: 7 Jan 2021 7:06 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச்சென்ற 50 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது குறித்து போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடும் விதிமுறைகள்
போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு தற்போது கடுமையாக்கியுள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் செல்வது, ஒருவழிப்பாதையில் போக்குவரத்து விதி முறைகளை மீறி சென்றால் ரூ.1000 அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன ஓட்டுனர் உரிமம் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக புதுவை போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தினர். அப்போது போக்கு வரத்து விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டி வந்த 50 பேரை பிடித்து தலா ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என போக்குவரத்து துறைக்கு பரிந்துரைத்தனர்.

நோட்டீஸ்
இதனை தொடர்ந்து புதுவை போக்குவரத்து துறை சார்பில் சாலை விதிமுறைகளை மீறியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் கூறியிருப்பதாவது:-

நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் உங்களது ஓட்டுனர் உரிமத்தை 3 மாதத்திற்கு ஏன் சஸ்பெண்ட் (ரத்து) செய்யக்கூடாது. எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் துறைக்கு உரிய விளக்கம் தர வேண்டும். இல்லையென்றால் மோட்டார் வாகன சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story