மராட்டிய மாநகராட்சி பகுதிகளில் இரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டது: கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற அரசு வேண்டுகோள்


மராட்டிய மாநகராட்சி பகுதிகளில் இரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டது: கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Jan 2021 7:10 AM IST (Updated: 7 Jan 2021 7:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநகராட்சி பகுதிகளில் இரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் மும்பை உள்பட 27 மாநகராட்சி பகுதிகளில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஜனவரி 5-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டது. மேலும் 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொது இடங்கள் மற்றும் ஓட்டல்கள், கேளிக்கை விடுதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க இரவு நேர ஊரடங்கை அரசு மேற்கொண்டு இருப்பதாக கூறப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து பரவும் புதுவகை கொரோனா காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. இந்த இரவு ஊரடங்கை போலீசார் தீவிரமாக அமல்படுத்தினர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூடவில்லை.

இதற்கிடையே நேற்று அதிகாலையுடன் இரவு ஊரடங்கு அவகாசம் முடிந்தது. இதனால் மீண்டும் இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அரசு எந்த தகவலையும் வெளியிடாமல் மவுனம் காத்தது. எனவே மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த நிலையில் இரவு ஊரடங்கை நீட்டிக்கவில்லை. இரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவல் இன்னும் நீங்கவில்லை. எனவே மக்கள் சுய ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story