மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் முழு கல்வி உதவித்தொகை; புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி


அம்பேத்கர் அறிவுசார் மையத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தபோது
x
அம்பேத்கர் அறிவுசார் மையத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தபோது
தினத்தந்தி 7 Jan 2021 7:21 AM IST (Updated: 7 Jan 2021 7:21 AM IST)
t-max-icont-min-icon

மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் முழு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அறிவுசார் மையம்
ஏனாமில் அம்பேத்கர் அறிவுசார் மைய திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்டு அறிவுசார் மையத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அமைச்சர் மல்லாடிகிரு‌‌ஷ்ணாராவ் தொடர்ந்து 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து ஏனாம் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்துள்ளார். மக்களுக்காக சண்டை போடுவதில் அவர் முன்னணியில் இருப்பார். இதற்கு ஒரு உதாரணம் வெள்ள தடுப்பு சுவர். இந்த திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்பு அதை நிறைவேற்ற போராடினோம். இப்போது அதற்கு வெற்றி கிடைத்துள்ளது.

கல்வி நிதி
ஆதிதிராவிட மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் உயர்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக நாங்கள்தான் கொண்டுவந்தோம். இதேபோல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கான கல்வி நிதி வழங்கும் திட்டத்தையும் கொண்டுவர உள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மல்லாடியா, கிரண்பெடியா?
அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பேசியதாவது:-

ஏனாமுக்கான திட்டங்களுக்கு கவர்னர் கிரண்பெடி முட்டுக்கட்டையாக இருந்தார். ஆனால் அவரால் எதையும் தடுக்க முடியவில்லை. மக்களுக்கு எதிராக இருப்பவரை அனுப்பும் வகையில் நடைபெற உள்ள போராட்டத்தில் புதுச்சேரியை ஸ்தம்பிக்க செய்ய வேண்டும்.

கவர்னர் கிரண்பெடிக்கு பகிரங்க சவால் விடுகிறேன். அவரால் ஒரு தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? ஏனாமில் போட்டியிட்டால் அவருக்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்காது. 

மல்லாடியா? கிரண்பெடியா? என்று மோதி பார்க்கலாம். இன்னும் 3 மாதத்தில் எஞ்சியுள்ள பணிகளை முடிப்பேன். நான் இங்கிருந்து போகமாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கந்தசாமி

அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
அனைத்து சமூக மக்களின் திட்டங்களையும் கவர்னர் கிரண்பெடி தடுத்துள்ளார். அவர் என்னதான் தடுத்தாலும் காங்கிரஸ் கட்சியில் 15 பேர் அடுத்த முறையும் வெற்றிபெறுவார்கள். கவர்னர் கிரண்பெடி, 

என்னை புதுச்சேரியை விட்டு அனுப்ப முடியாது. அதற்குள் உங்களை அனுப்பி விடுவேன் என்கிறார். இப்படிப்பட்ட கவர்னர் தேவையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, ஜான்குமார், கீதா ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story