காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு எதிரொலி; புதுவை கவர்னர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
கிரண்பெடிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளதையொட்டி கவர்னர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நவீன துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ் மத்திய போலீஸ் படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
போட்டி போராட்டம்
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி தர மறுத்து தேவையில்லாத கேள்விகளை கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். இல்லையென்றால் கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறார் என்று அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் மாநில வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தொடர்ந்து தடையாக இருந்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனையொட்டி கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்-அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
144 தடை உத்தரவு
இதனை தொடர்ந்து புதுவை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டம் நடத்த தடை விதித்தும், பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் விதமாகவும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை தலைமை செயலாளர் அஸ்வனி குமார், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, கலெக்டர் பூர்வா கார்க் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் ஆம்பூர் சாலையில் ஜென்மராக்கினி கோவில் அருகில் இருந்து ரங்கப்பிள்ளை வீதி, நீடராஜப்பையர் வீதி உள்ளிட்ட சாலைகளில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
மத்திய பாதுகாப்பு படை
இந்தநிலையில் காவல்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் பாதுகாப்புக்காக தெலுங்கானா, கேரளா மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 350 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரி வந்து சேர்ந்தனர்.
அவர்கள் கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று(வியாழக்கிழமை) முதல் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், சட்டசபை வளாகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
3 அடுக்கு பாதுகாப்பு
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் மத்திய பாதுகாப்பு படையினரும், அடுத்து ஐ.ஆர்.பி.என். காவலர்களும், இறுதியில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 8 அடி உயரத்திற்கு தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
துப்பாக்கிகளுடன் அணிவகுப்பு
இந்தநிலையில் நேற்று மாலை புதுச்சேரி நகர வீதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். நவீன துப்பாக்கிகள், கண்ணீர் புகைக்குண்டுகள், பாதுகாப்பு கவசங்களை ஏந்திய படி சென்றனர். முடிவில் கவர்னர் மாளிகை அருகே அவர்கள் ஒன்று கூடினர். அங்கு மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் மத்திய பாதுகாப்பு படை பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது கவர்னர் மாளிகை மற்றும் அரசு அலுவலகங்கள் அருகே மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கவர்னர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிடும் நோக்கில் சென்றால் அவர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் உத்தரவுகள் பிறப்பித்தனர்.
Related Tags :
Next Story