கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: குமரி எல்லையில் மருத்துவக்குழு தீவிர கண்காணிப்பு


கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: குமரி எல்லையில் மருத்துவக்குழு தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2021 9:26 AM IST (Updated: 7 Jan 2021 9:26 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக குமரி எல்லையில் மருத்துவக்குழு அமைத்து தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது.

களியக்காவிளை,

கேரளாவில் கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் பகுதிகளை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் வாத்து, கோழி உள்பட வீட்டில் வளர்க்கும் பறவைகளை கொல்லும் பணி நடந்து வருகிறது.

மேலும் கேரளாவில் பறவை காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவக்குழு

கேரளாவில் உள்ள பறவை காய்ச்சல் குமரி மாவட்டத்துக்கும் பரவி விடாமல் தடுக்க குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, குமரி மாவட்ட எல்லையில் அனைத்து கால்நடை உதவி டாக்டர்கள் தலைமையில் மருத்துவக்குழுக்கள் அமைத்து பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் களியக்காவிளை பேரூராட்சியில் படந்தாலுமூட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக பறவைக்காய்ச்சல் சோதனை சாவடி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள்.

மேலும் கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றி வரும் வாகனங்களை எல்லை பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகிறார்கள்.

தகவல் தெரிவிக்கலாம்

பறவை காய்ச்சல் நோயானது வாத்துகள், கோழிகள் மற்றும் இதர பறவைகளை பாதிக்கும் நோயாகும். இந்த நோய் தாக்கிய பண்ணையில் கோழிகள் அதிக அளவில்இறக்கலாம்.

எனவே தங்கள் பகுதியில் உள்ள பண்ணைகளில் அதிக அளவில் இறப்பு தெரியவந்தால், அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அல்லது கால்நடை மருந்தகங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அரவிந்த் கேட்டு கொண்டு உள்ளார்.

Next Story