மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கண்டனம்
கோவை தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க.வின் குண்டர்கள், தலித்பெண்ணை தாக்கி கூட்டத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். மேலும் அவர், கேட்ட கேள்விக்கு பதில்கூற முடியாமல், உள்ளாட்சித்துறை அமைச்சர் மீது குறைகூறி, தங்களது தலைமைக்கு விசுவாசத்தை வெளிபடுத்தும் வகையில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவையில் தேர்தல் நேரத்தில் தி.மு.க.வின் தலைமைக்கு தங்களது இருப்பையும், பொதுப்பணியில் ஈடுபட்டிருப்பதை போல் மாய தோற்றத் தை மக்களிடம் ஏற்படுத்திக் கொள்ள இதுபோன்ற அவதூறு அறிக்கை களை நா.கார்த்திக் தொடர்ந்து வெளியிட்டு வருவது கண்டனத்திற்கு உரியதாகும்.
தி.மு.க.வினருக்கு அருகதை இல்லை
அ.தி.மு.க. ஆட்சி மற்றும் கட்சி நிலைக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்து வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க.வினர் விமர்சிக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.
மேலும் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி, குறைகளை கேட்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதாக கூறிக்கொண்டு, கேள்வி கேட்பவர்களை அப்புறப்படுத்துவது, திட்டமிட்டு முன்கூட்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை மட்டும் கூட்டத்தில் பேச விட்டு, முதல்-அமைச்சர் மற்றும் எந்த மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறதோ அந்த மாவட்ட அமைச்சர்களையும், அ.தி.மு.க. அரசையும், கீழ்தரமான வார்த்கைகளால், தரக்குறைவாக விமர்சித்து, கேவலமான அரசியல் கபட நாடகத்தை மக்கள் கிராம சபை என்னும் பெயரில் மு.க.ஸ்டாலின் செய்து வருவது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.
மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய தலித் பெண்ணை தாக்கிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story