தமிழக-கேரள எல்லைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்; அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை


கேரள மாநிலத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
x
கேரள மாநிலத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
தினத்தந்தி 7 Jan 2021 11:16 AM IST (Updated: 7 Jan 2021 11:16 AM IST)
t-max-icont-min-icon

பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக-கேரள மாநில எல்லைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பணிகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

பறவை காய்ச்சல்
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திய நிலையில், தற்போது பறவை காய்ச்சலும் அச்சுறுத்தி உள்ளது. பல நாடுகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் சமீபத்தில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனால், தமிழக-கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் வழித்தடங்களான குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய மலைப்பாதைகளில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு போலீசார், கால்நடை பராமரிப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் இணைந்து தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கோழிப்பண்ணைகள்
கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இருந்து பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சரக்கு வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் 89 கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை கண்காணிக்கும் பணியிலும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அரசு துறை அதிகாரிகளுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில், பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக தனியாக கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கவும், பொதுமக்கள் மற்றும் கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு 
ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story