சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் அமைப்பு கலெக்டர் ஆய்வு


சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் அமைப்பு கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jan 2021 11:39 AM IST (Updated: 7 Jan 2021 11:39 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்,

சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியையும் அவசர கால தேவைக்கு பயன்படுத்த மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் வருகிற 13-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதையொட்டி ஒவ்வொரு மாநிலங்களிலும் தடுப்பூசி அனுப்பப்படும் போது, அதனை சேமித்து வைக்க தேவையான கிடங்குகளை குளிர்சாதன வசதியுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

குளிரூட்டப்பட்ட வசதி

அதன் அடிப்படையில் தமிழகத்தில் மருந்து சேவை கழகம் மூலம் சேமிப்பு கிடங்குகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பீச்ரோட்டில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள மண்டல தடுப்பூசி வைப்பு மையத்தில், கொரோனா தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பதற்காக குளிரூட்டப்பட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனை நேற்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கொரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு அனைத்து வசதிகளும் அந்த மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, அங்கிருந்த ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story