கடலூரில் தொடர் மழை: புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி 2 பேர் படுகாயம்


கடலூரில் தொடர் மழை: புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Jan 2021 11:44 AM IST (Updated: 7 Jan 2021 11:44 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர்,

சிதம்பரம் அருகே மேல்புவனகிரி கோட்டைதெருவை சேர்ந்தவர் குமணன் (வயது 51) . இவர் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் (பேக்கிங்) நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஆதித்யன் (19) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி, படித்து வருகிறார்.

குமணன் தற்காலிகமாக கடலூர் சாவடி சம்பந்தம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருவதோடு, தன்னுடைய நிறுவனத்திற்கு ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று வீட்டில் இருந்து புறப்பட்ட குமணன் காலை 9.55 மணி அளவில் ஆல்பேட்டை மெயின்ரோட்டில் புதுச்சேரி நோக்கி தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

மரம் சாய்ந்து விழுந்தது

அப்போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சாலையோரம் நின்ற பழமைவாய்ந்த புளிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து ஸ்கூட்டரில் சென்ற குமணன் தலையில் விழுந்தது. அவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வெள்ளப்பாக்கம் நாராயணமூர்த்தி மகன் வினோத் (21), சிதம்பரம் கொத்தவாச்சாவடி கிருஷ்ணமூர்த்தி நகர் உமாசங்கர் மகன் விஜயேஸ்வரன் (25) ஆகிய 2 பேர் மீதும் மரக்கிளைகள் விழுந்தன.

இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள் ஓடிச்சென்று அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் கிளைகளை வெட்டி ஒரு புறம் உள்ள பகுதியை மட்டும் அப்புறப்படுத்தி, அவர்களை மீட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் மரம் விழுந்ததில் உடல் நசுங்கி குமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் போராடிய மற்ற 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இறந்த குமணன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழமைவாய்ந்த மரம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்ததால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதையடுத்து அந்த மரத்தை சுமார் 1½ மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள், போலீசார், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். இருப்பினும் கடலூர் ஆல்பேட்டை நேதாஜி ரோடு- புதுச்சேரி சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வருவாய்த்துறையினர் விசாரணை

முன்னதாக தாசில்தார் பலராமன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இது பற்றி குமணன் மனைவி லட்சுமி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story