மதிகோன்பாளையம், இண்டமங்கலம் பகுதிகளில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்
மதிகோன்பாளையம் மற்றும் இண்டமங்கலம் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி நகராட்சி மதிகோன்பாளையம் மற்றும் காரிமங்கலம் ஒன்றியம் இண்டமங்கலம் பகுதிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், உதவி கலெக்டர் தணிகாசலம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி வரவேற்று பேசினார்.
இந்த விழாக்களில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்குகளை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அந்த மினி கிளினிக்குகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து மருத்துவத் துறை அதிகாரிகளுடன் அவர் கேட்டு அறிந்தார்.
விழாக்களில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது போன்ற திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
விழாவில் நேபாளம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச இணைய வழி வில்வித்தை போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தர்மபுரி மதிகோண்பாளையம் பகுதியை சேர்ந்த தர்ஷன் என்ற மாணவனை அமைச்சர் பாராட்டினார். விழாவில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், சாந்தி பெரியண்ணன், வேளாண் விற்பனைக்குழு துணைத்தலைவர் சிவப்பிரகாசம், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் செந்தில்குமார், செல்வராஜ், பெரியண்ணன், பழனிசாமி, தாசில்தார்கள் ரமேஷ், கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சரஸ்குமார், அனுராதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story