மாவட்டம் முழுவதும் 367 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம்


மாவட்டம் முழுவதும் 367 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2021 7:18 PM IST (Updated: 7 Jan 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 367 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி பள்ளிகளை திறக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போது பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து முதல்கட்டமாக பொங்கல் விடுமுறைக்கு பிறகு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை திறக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பெற்றோரிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 367 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெகதீசன், வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்திபாண்டியன், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பார்வதி ஆகியோர் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் தெரிவித்த கருத்துகள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுக்கு இணங்க அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story