ராஜபாளையம் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை


ராஜபாளையம் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 7 Jan 2021 8:33 PM IST (Updated: 7 Jan 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

ராஜபாளையம்,

ராஜபாளையம், சத்திரப்பட்டி, சம்சிகபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஏற்கனவே கடந்த மாதத்தில் பெய்த மழையினால் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி உள்ளன. தற்போது பெய்த மழையினால் இன்னும் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை, அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காந்தி சிலை ரவுண்டானா வரை பல்வேறு இடங்களில் வணிக வளாகங்களில் கடந்த மாதம் பெய்த மழையினால் நீரூற்று அதிகரித்து கசிவு ஏற்பட்டு நீர் வடிந்து வருகிறது.

தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தினசரி நீரை அகற்றி வருகிறார்கள்.

அதேபோல தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. தளவாய்புரம் பால் டிப்போ தெரு, செட்டியார்பட்டி அரசரடி பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு மழை நீரும், கழிவு நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ேதங்கி நின்றது. வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள ரோட்டடித்தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் பெரும்பாலான தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் தாழ்வாக இருப்பதால் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

Next Story