கொரோனா தடுப்பூசிகளை சேமிக்க குளிர்சாதன பெட்டிகள் - மும்பையில் இருந்து மதுரைக்கு வந்தன
தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதியாக மும்பையில் இருந்து அதிநவீன வசதி கொண்ட 21 குளிர்சாதன பெட்டிகள் மதுரைக்கு வந்துள்ளன.
மதுரை,
சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியையும் இந்தியாவில் அவசர கால தேவைக்கு பயன்படுத்த மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இதர நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 13-ந்தேதி முதல் இந்த தடுப்பூசி போடப்பட வாய்ப்புள்ளது. யார் யாருக்கெல்லாமல் முதலில் போடவேண்டும் என்பதற்கான பட்டியலை தயார் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில், சுகாதாரத்துறை மற்றும் அரசுத்துறைகளில் உள்ள முன்கள பணியாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவர்களின் பெயர்கள் இதுவரை முழுமையாக பெறப்படவில்லை. இதனால் மதுரை மாவட்டத்தில் முதற்கட்ட பட்டியல் முழுமையாக தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை சேமித்து வைக்க, மதுரை உலக தமிழ்ச் சங்க கட்டிட சாலையில் அமைந்துள்ள மதுரை மண்டல தடுப்பூசி பண்டக சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு தான் கொரோனா தடுப்பூசிகள் வைக்கப்பட இருக்கிறது. அதன்படி கொரோனா தடுப்பூசிகளை சேமிக்க வசதியாக மும்பையில் இருந்து அதி நவீன வசதி கொண்ட 21 குளிர்சாதன பெட்டிகள் மதுரை வந்துள்ளன.
இந்த குளிர்சாதன பெட்டிகள் மதுரைக்கு மட்டும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதுபோல், திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு 43 குளிர்சாதனப் பெட்டிகள் ஒரு சில நாட்களில் வர இருக்கின்றன. இங்கு சேமிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு தரப்பில் முன்கள பணியாளர்கள் 7,950 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மதுரையில் 6.75 லட்சம் தடுப்பூசிகளை சேமிப்பதற்கான வசதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி தற்போது வந்துள்ள குளிர்சாதன பெட்டிகளில் தலா ஆயிரம் என 21 ஆயிரம் தடுப்பூசிகளை சேமிக்க முடியும். முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதற்காக 96 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்காக 7 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். அந்தந்த மையங்களுக்குத் தடுப்பூசிகள் 2 நாட்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்படும். இதுபோல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போட மருத்துவமனையில் தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story