ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தற்காலிக சாலையில் போக்குவரத்து ரத்து


ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தற்காலிக சாலையில் போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 8 Jan 2021 5:25 AM IST (Updated: 8 Jan 2021 5:25 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தற்காலிக சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள அணை முழுவதுமாக நிரம்பினால் உபரிநீர் ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து வங்க கடலில் கலக்கிறது. நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூர் ஆரணியாறு அணை முழுவதுமாக நிரம்பியது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

வாகன போக்குவரத்து ரத்து
இதன் காரணமாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர் கடந்த 25-ந்தேதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தின் கிழக்கு திசையில் தற்காலிகமாக சாலை அமைக்கபட்டது. இந்த தற்காலிக சாலை வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சென்று வந்தன. பஸ் மற்றும் லாரிகள் மாற்று மார்க்கத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த மழை காரணமாக பிச்சாட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானது.

இதனை கருத்தில் கொண்டு பிச்சாட்டூர் அணையில் இருந்து நேற்று காலை ஆரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலையிலும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். தரைப்பாலம் பகுதியில் ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது தற்காலிக படிகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

Next Story