திருத்தணி அருகே பெற்றோர் கண்டித்ததால் மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மிதந்தார்


ஏசு ரத்தினம்
x
ஏசு ரத்தினம்
தினத்தந்தி 8 Jan 2021 5:32 AM IST (Updated: 8 Jan 2021 5:32 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர் மாயமானார். 2 நாட்களுக்கு பிறகு அவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.

வாலிபர் மாயம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் அகூர் காலனி நடுத்தெருவில் வசித்து வருபவர் தனபால். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஏசு ரத்தினம் (வயது 35). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் இவரை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் இவர் வீட்டில் இருந்து மாயமானார். அவரை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் மாயமானதாக திருத்தணி போலீசில் அவரது தந்தை தனபால் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசு ரத்தினத்தை தேடிவந்தனர்.

கிணற்றில் பிணமாக மிதந்தார்
இந்தநிலையில் நேற்று காலை இந்த கிராமம் அருகே உள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணம் கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றில் மிதந்த ஆண் பிணத்தை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விசாரணையில் பிணமாக மிதந்த அவர் மாயமான ஏசு ரத்தினம் என்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story