கர்நாடகத்தில் ரவுடிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்; போலீசாருக்கு கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா வேண்டுகோள்


கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா
x
கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா
தினத்தந்தி 8 Jan 2021 6:43 AM IST (Updated: 8 Jan 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ரவுடிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று போலீசாருக்கு கவர்னர் வஜூபாய் வாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி பதக்கம்

கர்நாடகத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கி பேசும்போது கூறியதாவது:-

போலீசார் மக்களுக்கு எவ்வளவு அன்பு வழங்குகிறார்களோ அவ்வளவு நம்பிக்கையை மக்கள் திருப்பி கொடுப்பார்கள். நல்லவர்களை பாதுகாக்க வேண்டும். மோசமானவர்களின் மனநிலையை நாசப்படுத்துங்கள். நல்லவர்கள் வாழ அமைதியான சூழலை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் ரவுடிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். தவறு செய்தவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

போலீசார் அவசியம்
மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகள் என யார் போராட்டம் நடத்தினாலும் போலீசார் வேண்டும். எங்காவது தீப்பிடித்தால் அவர்களை மீட்கவும், கட்டிடம் இடிந்து விழுந்தால் அங்கு இருப்பவர்களை காப்பாற்றவும் போலீசாரின் உதவி தேவைப்படுகிறது. கொலையாக இருந்தாலும் சரி, குண்டர்கள் சண்டையாக இருந்தாலும் சரி போலீசார் அவசியம் வேண்டும்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசாரின் பணி நிரந்தரமாக தேவைப்படுகிறது. போலீஸ் துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைத்துள்ளது. பதக்கம் வாங்கியது பெரிய வேலை அல்ல. இந்த பதக்கம் பெற்றால் உங்களின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதனால் இன்னும் நம்பிக்கை, விசுவாசத்துடன் பணியாற்ற வேண்டும்.

உயிரை பணயம் வைத்து...
பதக்கம் வாங்காதவர்கள் இன்னும் சிறப்பாக பணியாற்றி பதக்கம் பெற முயற்சி செய்ய வேண்டும். போலீசாரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இங்கு கவர்னராக இருக்கும் வரை போலீசாரின் பக்கம் இருப்பேன். உங்களின் கோரிக்கையை யாராவது நிறைவேற்றாவிட்டால் அதுகுறித்து எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.

கொரோனா நெருக்கடி காலத்தில் போலீசார் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றினர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு போலீசார் பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறவர்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். போலீசாரின் மொழி தற்போது மாறியுள்ளது. முன்பெல்லாம் போலீசார், மிரட்டினர். இப்போது போலீசார் நிலைைமயை எடுத்துக் கூறி விளக்க முயற்சி செய்கிறார்கள்.

தோழமை எண்ணம்
போலீசார் தற்போது மக்களுடன் தோழமை எண்ணத்துடன் பழகுகிறார்கள். எந்த நாட்டில் போலீஸ் துறை ஒழுக்க கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறதோ அந்த நாடு நிச்சயம் முன்னேற்றம் அடையும். 

குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது நள்ளிரவு 2 மணிக்கு பெண்கள் தனியாக சாலையில் நடந்து செல்கிறார்கள். தவறு செய்பவர்கள் தான் போலீசாரை கண்டு பயப்பட வேண்டும். தவறு செய்யாதவர்கள் பயப்பட தேவை இல்லை.

இவ்வாறு வஜூபாய் வாலா கூறினார்.

விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் துறை முதன்மை செயலாளர் ரஜனீஸ் கோயல், போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story