துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு: தலைவரை கண்டித்து கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி


துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு: தலைவரை கண்டித்து கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 8 Jan 2021 2:35 AM GMT (Updated: 8 Jan 2021 2:35 AM GMT)

துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவரை கண்டித்து கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சரண்யா தலைமை தாங்கினார். துணை தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 17 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், 15-வது நிதிக்குழுவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடியே 60 லட்சத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்காக, ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது ஒவ்வொரு ஊராட்சிக்கு தகுந்தாற்போல ஆரம்ப தொகையாக ரூ.2 லட்சம் வரை முதற்கட்டமாக மகளிர் சுகாதார வளாகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி

ஆனால், அந்த நிதி கழிப்பிடம் கட்டுவதற்கு போதாது என்றும், எங்களை ஊராட்சி ஒன்றிய தலைவர் பாரபட்சமாக நடத்துகிறார் என்றும் கவுன்சிலர்கள், சின்னம்மாள், சிவகுமார், அசோகன், லலிதா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டரங்கில் தரையில் உட்கார்ந்து தர்ணா செய்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, கவுன்சிலர் அசோகன் தவிர மற்ற 3 கவுன்சிலர்களும் ஒன்றிய அலுவலகத்தின் முன் தரையில் உட்கார்ந்து ஒன்றிய தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி தர்ணா செய்தனர். அப்போது திடீரென கவுன்சிலர் சிவகுமார், பெட்ரோலை தனது தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

இதைப்பார்த்து, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story