வர்த்தக பயன்பாட்டுக்கு கட்டணம் குறைகிறது; வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை; புதுச்சேரி மின்துறை அறிவிப்பு
புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயராது. வர்த்தக பயன்பாட்டிற்கான கட்டணம் குறையும் என்று மின்துறை தெரிவித்துள்ளது.
மின் கட்டணம்
மின்கட்டண உயர்வு தொடர்பாக புதுவை மின்துறை கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பம் செய்யும். அதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்டு மின்கட்டண உயர்வு குறித்து அனுமதி அளிக்கும்.
இந்த ஆண்டு புதுவை யூனியன் பிரதேசத்துக்கான நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டண நிர்ணயம் குறித்து விண்ணப்பிக்கப்பட்டது. அதில் ரூ.1,313 கோடியே 22 லட்சத்துக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. மின் ஊழியர்களுக்கான செலவுத் தொகை, பராமரிப்பு செலவு, தேய்மானம் ஆகியவற்றை கருத்தில்கொண்டால் யூனிட்டுக்கு அடக்க விலையாக ரூ.5.64 ஆகிறது.
கட்டண உயர்வு இல்லை
இருந்தபோதிலும் 2021-22ம் நிதியாண்டில் எந்த மின் இணைப்புக்கும் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கவில்லை. ஆனால் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை நுகர்வோருக்கு மட்டும் சில வரி மாற்றங்களை செய்ய உத்தேசித்துள்ளது.
வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.50, 101-200 யூனிட் வரை ரூ.2.55, 201-300 யூனிட் வரை ரூ.4.50, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தக பயன்பாடு
அதே நேரத்தில் வர்த்தக பயன்பாட்டிற்கான மின்சார கட்டணம் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.60-ல் இருந்து ரூ.5.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 101-250 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.6.65-ல் இருந்து ரூ.6.30 ஆக குறைகிறது. 250 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.40-ல் இருந்து ரூ.7.10 ஆக குறைகிறது.
இதுதொடர்பான விண்ணப்பம் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் கருத்து கேட்க உள்ளது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கருத்துகேட்பு கூட்டம் தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மின்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story