தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளில் 277 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு


தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளில் 277 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு
x
தினத்தந்தி 8 Jan 2021 9:31 AM IST (Updated: 8 Jan 2021 9:31 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளில் 277 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதனை முதன்மைக்கல்வி அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

கொரோனா நோய் தொற்றால் பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நோயின் தாக்கம் குறைந்து வருவதால் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவுசெய்யப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி 6, 7 ஆகிய தேதிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 438 பள்ளிகள் உள்ளன. இதில் 161 தனியார் பள்ளிகளில் மட்டும் நேற்று முன்தினம் கருத்துகள் கேட்கப்பட்டன.

2-வது நாள்

நேற்று 2-வது நாள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் என 277 பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிரு‌‌ஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்றால் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்றவற்றை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொடுத்து அனுப்ப வேண்டும். பள்ளிகளுக்கு சென்றால் எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் எடுத்துக்கூற வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். நண்பர்களுடன் மிக நெருங்கி பேசக்கூடாது. அவர்களிடம் கைகளை பிடித்து விளையாடக்கூடாது என எடுத்துக்கூற வேண்டும். கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழியும் வரை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என எடுத்துக்கூறுங்கள்’’என்றார்.

இணையதளம் மூலம் அனுப்பப்பட்டது

கூட்டத்தில் பெற்றோர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் உடனுக்குடன் இணையதளம் வழியாக பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story